நெருங்கும் ‘மோந்தா’ புயல்: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை மையம்
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் ‘மோந்தா’ புயலாக உருவாகும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டதாவது:
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ம் தேதி காலை தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. பின்னர் இது ஆந்திரா கடற்கரை பகுதிகளில் (மசூலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே) 28-ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும்.
அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90–110 கிமீ வரை வீசக்கூடும் எனவும், இதற்கே “மோந்தா” என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மழை முன்னறிவிப்பு
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
27–ம் தேதி: வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
28–ம் தேதி: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 30–ம் தேதி வரை, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35–55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.