270 கோடி ரூபாய் மருத்துவ மோசடி: இந்திய வம்சாவளி சகோதரர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை!
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதி மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. பென்சில்வேனியாவில் வசித்து வந்த பாஸ்கர் சவானி மற்றும் அருண் சவானி ஆகியோரே இந்த மிகக்கடுமையான தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
மோசடியின் பின்னணி:
மருத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வந்த இந்தச் சகோதரர்கள், அமெரிக்க அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் ‘மெடிகேட்’ (Medicaid) மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் கைவரிசை காட்டியுள்ளனர். தகுதியற்ற நபர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துவிட்டு, தகுதியுள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகப் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, சுமார் 270 கோடி ரூபாய் வரை அரசுப் பணத்தைச் சுருட்டியது விசாரணையில் அம்பலமானது.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்:
நிதி மோசடி மட்டுமின்றி, போலி ஆவணங்கள் மூலம் H-1B விசா பெற்றது, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியது, முறையான வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்தது மற்றும் சட்டவிரோதப் பணத்தைப் பதுக்கப் போலி நிறுவனங்களைத் தொடங்கியது என இவர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் சுமத்தப்பட்டன. இவை தொடர்பான 42 குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்கும் வகையில் 420 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.