ஈரான் போரால் ரஷ்யாவுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ. 64,000 கோடிக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து சாதனை!
மாஸ்கோ:
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா, சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் முடங்கியிருந்த ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திற்கு, தற்போதைய ஈரான் போர் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தடைபட்ட போக்குவரத்து – கைகொடுத்த ரஷ்யா:
ஈரான் போர் தீவிரமடைந்த நிலையில், பாரசீக வளைகுடாவில் உள்ள முக்கிய நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் அந்த வழியாக நடைபெற்று வந்த சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா, சர்வதேச சந்தையில் தனது கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிரடியாக அதிகரித்தது. முன்னதாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா மானிய விலையில் எண்ணெய் வாங்குவதற்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டிருந்த நிலையில், தற்போது பல நாடுகள் வேறு வழியின்றி ரஷ்யாவை நாடியுள்ளன.
14 சதவீத வளர்ச்சி:
ஜெர்மனியைச் சேர்ந்த ‘அர்ஜ்வால்டு’ (Urgewald) அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, போர் தொடங்கியது முதல் இதுவரை ரஷ்யா சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகளின் தடைகளையும் மீறி, இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் ரஷ்யாவின் பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.