ஈரான் போர்: சீனாவின் மௌனம் ஏன்? உலகை உற்றுநோக்க வைக்கும் சீனாவின் ‘நிழல்’ அரசியல்!
பெய்ஜிங்: வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள் 10 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், உலக வல்லரசான சீனா கடைபிடிக்கும் ‘அமைதி’ சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பொருளாதாரத் தூண்: ஈரானிய எண்ணெய்
சீனாவின் எரிசக்தி தேவையில் 55 சதவீதத்திற்கும் மேலானது மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது. இதில் ஈரானின் பங்கு மிக முக்கியமானது.
- ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதம் சீனாவிற்குச் செல்கிறது.
- 2021 முதல் சுமார் 140 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெயை சீனா ஈரானிடமிருந்து பெற்றுள்ளது.
- 25 ஆண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் வங்கித்துறையில் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.
அமெரிக்காவை திசைதிருப்பும் சீனாவின் கணக்கு:
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை சீனா விரும்புவதில்லை. மத்திய கிழக்கில் போர் நீடிக்கும் வரை, அமெரிக்காவின் கவனம் மற்றும் ராணுவ நிதி (இதுவரை இஸ்ரேலுக்கு $17.9 பில்லியன்) அங்கு செலவிடப்படும். இதனால், தைவான் மீதான அமெரிக்காவின் பிடி தளர்ந்து அது தனக்குச் சாதகமாக அமையும் என சீனா கருதுகிறது. அதாவது, அமெரிக்கா மத்திய கிழக்கில் செலவிடும் ஒவ்வொரு டாலரும் சீனாவின் ‘தைவான்’ இலக்கிற்கு மறைமுக உதவியாகவே பார்க்கப்படுகிறது.
ராணுவ ரீதியான கள்ளத்தொடர்பு?
சீனாவின் ZTE நிறுவனம் ஈரானின் இணையக் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கித் தந்ததோடு, சமீபத்தில் சீனா தயாரித்த ‘சூப்பர்சோனிக்’ கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதிலும் ஈரான் ஆர்வம் காட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா தங்களுக்கு உளவுத் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஏன் சீனா அமைதியாக இருக்கிறது?
ஈரானை சீனா கைவிட்டால், அதன் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) கேள்விக்குறியாகும். அதேசமயம், அமெரிக்காவை நேரடியாக எதிர்த்தால் அது பொருளாதார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஈரான் அமெரிக்காவின் சக்தியை உறிஞ்சும் ஒரு கருவியாக இருக்கும் வரை, சீனா அமைதியாகவே இருக்கும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைத்து, ஈரானின் தோள் மீது சாய்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே சீனா இந்த ‘மௌனத் தந்திரத்தை’ கையாண்டு வருகிறது.