குமரியில் கனமழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், கோதையாறு, வள்ளியாறு மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், சுற்றியுள்ள பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை மண்டலத்தை தாக்கி வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் மழை தீவிரமடைந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியான பாலமோரில் 92 மிமீ மழை பதிவானது. இதன் விளைவாக, அணைக்கு விநாடிக்கு 3,955 கனஅடி தண்ணீர் வரத்தாகி, நீர்மட்டம் 44.51 அடிவரை உயர்ந்தது. இதனால் தண்ணீர் திறந்து விடப்பட்டு, கோதையாறு மற்றும் வள்ளியாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கரையோர மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினர். திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.
திற்பரப்பில் 82 மிமீ, சுருளோட்டில் 65, முள்ளங்கினாவிளை மற்றும் மைலாடியில் தலா 54, சிற்றாறு பகுதியில் 48, பேச்சிப்பாறையில் 45, கன்னிமாரில் 44, பெருஞ்சாணியில் 42, குருந்தன்கோட்டில் 40 மிமீ மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடிவரை உயர்ந்துள்ளது. விநாடிக்கு 2,811 கனஅடி தண்ணீர் வரத்தாகியுள்ளது. நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது.
கனமழையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. ரப்பர் பால் வெட்டும் தொழில் ஏழாவது நாளாக நிறுத்தப்பட்டிருந்தது. மழையால் திட்டுவிளை, செண்பகராமன்புதூர், வேம்பனூர் பகுதிகளில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நாகர்கோவில் வடசேரி, கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
மழையால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் பாதிப்புகள் ஏற்பட்டன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை கடந்ததால், பரளியாற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வலியாற்றுமுகம், அருவிக்கரை, திருவட்டாறு, மூவாற்றுமுகம் வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கலந்து தேங்காய்பட்டினம் கடலுக்கு செல்கிறது.
இதனால், அந்த ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.