மேற்காசியப் பதற்றம்: ரஷ்ய அதிபர் புதினிடம் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசிய டிரம்ப்
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் விரிவான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், புதினிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதாகவும், அப்போது ஈரானுடனான மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என புதின் தன்னிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த உரையாடலானது மிகவும் வெளிப்படையாகவும், வணிக ரீதியாகவும் மற்றும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், ஈரான் விவகாரம் மட்டுமின்றி உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உரையாடல், மேற்காசியப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.