போர் ஒன்றும் திரைப்படம் அல்ல: ஹாலிவுட் படக்காட்சிகளுடன் போர் வீடியோ வெளியிட்ட வெள்ளை மாளிகைக்கு பென் ஸ்டில்லர் கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை ஹாலிவுட் திரைப்படக் காட்சிகளுடன் கலந்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் தனது படத்தின் காட்சிகளை அனுமதி இன்றிப் பயன்படுத்தியதற்குப் பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான பென் ஸ்டில்லர் (Ben Stiller) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்ட 42 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஈரான் மீதான அமெரிக்காவின் உண்மையான ஏவுகணைத் தாக்குதல்களுடன் முன்னணி ஹாலிவுட் படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கையைப் பெருமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், பென் ஸ்டில்லர் இயக்கி நடித்த ‘டிராபிக் தண்டர்’ (Tropic Thunder) படத்தின் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்குத் தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமான பதிவை வெளியிட்டுள்ள பென் ஸ்டில்லர், “நாங்கள் இதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை. உங்கள் பரப்புரை இயந்திரத்தின் (Propaganda machine) ஒரு பகுதியாக இருக்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. போர் என்பது ஒன்றும் திரைப்படம் அல்ல,” என்று பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டின் ராணுவ நடவடிக்கையைத் திரைப்படக் காட்சிகளுடன் ஒப்பிட்டு வெளியிட்டது உலகளவில் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.