சீனாவிடம் செய்த தவறை இந்தியாவிடம் செய்ய மாட்டோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் உறுதி!
டெல்லியில் நடைபெற்ற ‘ரெய்சினா மாநாட்டில்’ (Raisina Dialogue) உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவ், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுடன் வர்த்தக ரீதியாகச் செய்த தவறுகளை இந்தியாவிடம் அமெரிக்கா மீண்டும் செய்யாது என்று உறுதியளித்துள்ளார். இந்திய அரசாங்கம் தனது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடமை இருப்பதைப் போலவே, அமெரிக்காவும் தனது நாட்டு மக்களின் நலனுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். வணிக விவகாரங்களில் அமெரிக்காவின் நலன்களை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், அமெரிக்க மக்களுக்கு நியாயமாக இருப்பதில் தனது நாடு உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை (Finish Line) எட்டியுள்ளதாகத் தெரிவித்த அவர், நூற்றாண்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அளவிற்கான நம்பமுடியாத பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகப் புகழ்ந்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவு வரும் காலங்களில் புதிய உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.