சுகோய்-30MKI போர் விமான விபத்து: இரண்டு விமானிகள் உயிரிழப்பு – சீனாவின் சிக்னல் ஊடுருவலா எனத் தீவிர விசாரணை!
இந்திய விமானப்படையின் முதுகெலும்பாகக் கருதப்படும் அதிநவீன Su-30MKI போர் விமானம் ஒன்று அசாம் மாநிலத்தின் கர்பி அங்லோங் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்தத் துயரமான விபத்தில் விமானத்தில் பயணித்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் பிளைட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர் ஆகிய இருவரும் உயிரிழந்ததை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. ஜோர்ஹட் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட இந்த விமானம், சுமார் 60 கி.மீ தொலைவில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
விபத்தின் பின்னணியில் சீனா?
இந்த விபத்து நிகழ்ந்த இடம் இந்திய-சீன எல்லைக்கு அருகில் இருப்பதாலும், அப்பகுதியில் சீனாவின் விமானப்படை தளம் அமைந்திருப்பதாலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ரடார்களிலிருந்து தப்பிக்கும் ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த சூப்பர் சோனிக் விமானம் விபத்துக்குள்ளாவது மிக அரிதான ஒன்று. இதனால், சீனாவின் விமானப்படை தளத்திலிருந்து வேண்டுமென்றே அனுப்பப்பட்ட ரேடார் சிக்னல்கள் (Electronic Interference), சுகோய் விமானத்தின் வழிகாட்டுதல் அமைப்பைத் தவறாக திசைதிருப்பியதா என்ற கோணத்தில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய விமானப்படையின் பலம்
1997-ம் ஆண்டு முதல் இந்தியப் படையில் இணைக்கப்பட்ட சுகோய் ரக விமானங்கள், தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் (HAL) உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. சுமார் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த விபத்து இந்திய வான் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விமானிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கருப்புப் பெட்டி (Black Box) ஆய்வின் மூலம் விபத்திற்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.