“பாதுகாப்பான சூழலே பண்டிகைகளுக்கு அர்த்தம் அளிக்கும்” – முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழாரம்!
கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்நாத் கோயிலில் நடைபெற்ற பாரம்பரிய ஹோலி கொண்டாட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒரு நாடு பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கும் சூழலில் மட்டுமே அங்கு கொண்டாடப்படும் பண்டிகைகள் முழுமையான அர்த்தத்தைப் பெறும் என்று குறிப்பிட்டார்.
நமது முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹோலிப் பண்டிகையின் உன்னத பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனை நல்லிணக்க உணர்வுடன் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தற்போதைய தலைமுறையினர் அதே உற்சாகத்தோடும், சமூக ஒற்றுமையோடும் இந்தப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார். விழாவின் போது அங்கிருந்த சாதுக்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வண்ணப் பொடிகளைத் தூவி அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்