டெல்டா மாவட்ட ஆய்வு திடீரென தள்ளிவைப்பு – அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம் மேற்கொண்ட மத்தியக் குழு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் தாமதமடைந்துள்ளதுடன், விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல்மணிகளில் முளை வீச்சும், ஈரப்பத அளவும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில், மத்திய உணவுத் துறை அமைச்சகம், தமிழகத்தில் நிலைமையை ஆய்வு செய்ய மூன்று குழுக்களை அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனுப்பியது.
அதில், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய உணவுத் துறை துணை இயக்குநர் ஆர்.கே. சஹி தலைமையிலான குழுவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்ய இணை இயக்குநர் பி.கே. சிங் தலைமையிலான குழுவும் திருச்சியில் தங்கி இருந்தன.
ஆனால், மத்திய உணவுத் துறையின் திடீர் உத்தரவையடுத்து, செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) உற்பத்தி ஆலைகளைப் பார்வையிட ஆர்.கே. சஹி குழு நாமக்கல்லுக்கும், பி.கே. சிங் குழு கோவைக்கும் புறப்பட்டுச் சென்றது. இவர்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர் செந்தில் மற்றும் மேலாளர் மணிகண்டனும் சென்றனர்.
இதன் விளைவாக, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த மத்தியக் குழுவின் நெல் கொள்முதல் நிலைய ஆய்வுப் பணிகள் ஒரு நாள் தள்ளிப்போனது. அவை இன்று (அக்டோபர் 26) நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.