சிபிஐ எஃப்ஐஆர் நகல் கேட்டு நீதிமன்றத்தில் தவெக வழக்கறிஞர்கள் மனு
கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் நிர்வாகிகள் பெயர் இடம்பெற்றிருப்பதைத் தொடர்ந்து, அந்த ஆவணத்தின் நகலை வழங்குமாறு தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கரூர் நகர காவல்துறை தவெக நிர்வாகிகள் மூவர்மீதும் வழக்கு பதிவு செய்து, மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தது.
அதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபர் 3-ஆம் தேதி சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டது. அக்.5-ம் தேதி கரூரில் விசாரணை தொடங்கிய குழு, அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள், உள்ளூர் தொலைக்காட்சி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெற்றது. மதியழகனிடம் இரண்டு நாள் காவல் விசாரணையும் நடத்தப்பட்டது.
பின்னர், அக்டோபர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐக்குக் (CBI) மாற்றி விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அக்.16-ம் தேதி கரூருக்கு வந்த சிபிஐ அதிகாரிகளிடம், அக்.17-ம் தேதி எஸ்ஐடி விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
அக்.22 அன்று, சிபிஐ இன்ஸ்பெக்டர் ஒருவர் கரூர் ஜூடிஷியல் மாஜிஸ்ட்ரேட்-1 நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். ஜேஎம்-1 மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி. பரத்குமார் விடுப்பில் இருந்ததால், அந்தக் கடிதம் ஜேஎம்-2 நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (FIR) அடங்கியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த எஃப்ஐஆர், சிபிஐ ஏஎஸ்பி முகேஷ் குமார் அவர்களால் அக்டோபர் 18 அன்று பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த எஃப்ஐஆர் நகலை வழங்குமாறு கரூர் ஜேஎம்-1 நீதிமன்றத்தில், தவெக சார்பில் அரசு மற்றும் கட்சியின் வழக்கறிஞர்கள் இன்று (அக்டோபர் 25) மனு தாக்கல் செய்துள்ளனர்.