இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி:
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்குத் தடை கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும், கட்சியின் சின்னத்திற்குத் தடை கோரியும் புகழேந்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகள் காரணமாக அதிமுக விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது முடிவெடுக்க இயலவில்லை என்றும், இது போன்ற ஆறு மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் விளக்கம் அளித்தார். இதற்குப் புகழேந்தி தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்தும், தலைமை தேர்தல் ஆணையர் திட்டமிட்டே காலதாமதம் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தேர்தல் வருவதற்கு முன்பே இந்த விவகாரத்தில் ஏன் முடிவெடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்த நிலை அறிக்கையை (Status Report) நான்கு வார காலத்திற்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.