புதுக்கோட்டையில் அதிரடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ₹9 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்!
புதுக்கோட்டை: ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை புதுக்கோட்டை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பெரிய பெட்டிகளுடன் நின்றிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்தப் பெட்டிகளைச் சோதனை செய்ததில், சுமார் 4 லட்சத்து 82 ஆயிரம் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா, “இந்த போதை மாத்திரை கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகளைக் கண்டறிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். சர்வதேச அளவில் தொடர்பு உடைய இந்தக் கடத்தல் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.