கோயில் அழைப்பிதழ்களில் இனி சாதிப் பெயர்களுக்கு இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழா அழைப்பிதழில் சாதிப் பெயர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் இந்த முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, “இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் விழாக்களில் சாதிப் பெருமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுவிட்டதாலும், விழா நாளை தொடங்க உள்ளதாலும் தற்போது எந்த மாற்றமும் செய்ய இயலாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துக் கோயில் விழாக்களிலும் அச்சிடப்படும் அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது என்று ஆணையிட்டார்.
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பு, ஆன்மீக மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.