அமைச்சர் முத்துசாமி தொகுதியில் மக்கள் அதிரடி: “அடிப்படை வசதிகள் இல்லை” – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் பேனர்கள்!
தமிழக அமைச்சர் முத்துசாமி அவர்களின் சொந்தத் தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதியில், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்துப் பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் புதுவலசுப் பகுதிக்கு உட்பட்ட சக்தி நகர், நாகம்மா நகர், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதிகளில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லை என்றும், சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாகப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ஈரோடு-சென்னிமலை சாலையில் “தேர்தலைப் புறக்கணிக்கிறோம்” என பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். அமைச்சரின் தொகுதியிலேயே பொதுமக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.