பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு: தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டண்ட் அதிரடி சஸ்பெண்ட்!
பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த கமாண்டண்ட் செந்தில்குமார் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். கோவைபுதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவில் கமாண்டண்டாகப் பணியாற்றி வந்த இவர் மீது, பயிற்சியில் இருந்த பெண் காவலர் ஒருவர் பாலியல் ரீதியான புகாரை அளித்துள்ளார்.
பயிற்சிக்கு வந்த அந்தப் பெண் காவலரிடம் செந்தில்குமார் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், துறை ரீதியான முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. புகாரில் முதற்கட்ட முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, உயர் அதிகாரிகள் அவரைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் விரிவான விசாரணையின் முடிவில், அவர் மீது அடுத்தகட்டக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.