ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறி மது விற்பனை: பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விதிகளுக்குப் புறம்பாக மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் செயல்படும் ஒரு கூடத்தில், காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தடையின்றி மது விற்பனை செய்யப்படுகிறது. முறையாக உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டும் என்ற விதியை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, பொதுமக்களுக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், இதனைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பகல் நேரங்களிலேயே மது அருந்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் இந்தச் சட்டவிரோத விற்பனையால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.