சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்: சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி மீது தாக்குதல்
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்ட போராட்டத்தின்போது, சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழும்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் சென்றனர்.
தாம்பரம், கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரவு முழுவதும் பேருந்துகளிலேயே அழைத்துச் சென்று போலீசார் அலைக்கழித்ததாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது, காவல்துறையின் தாக்குதலில் ஜான்சிராணி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.