ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர்: அமித்ஷா
ராகுல் காந்தியின் பொய் உற்பத்தி தொழிற்சாலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி அடிப்படையிலான மானிய பரிமாற்றத் திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, காந்திநகர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா கனவின் அடுத்த கட்டமாக இந்தத் திட்டம் விளங்குகிறது என தெரிவித்தார். மேலும், நவீன தொழில்நுட்ப திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கான உணவுப் பொருட்கள் நேரடியாகவும் முழுமையாகவும் சென்றடைவதாகக் கூறி நெகிழ்ச்சியடைந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவசாயிகள் குறித்து ராகுல் காந்தி பேசுவது தனக்கு சிரிப்பை வரவழைப்பதாக விமர்சித்தார். விவசாயிகளுக்கு உண்மையில் தீங்கு செய்தது யார் என்பது குறித்து பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா என ராகுல் காந்திக்கு நேரடி சவால் விடுத்தார்.