“ஆம்… வீட்டுக்குள் தான் இருக்கிறேன்; தமிழ்நாடுதான் என் வீடு” என்று, விமர்சனங்களுக்கு விஜய் பதிலடி கொடுத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், “வீட்டிலிருந்து வெளியே வா” என விமர்சிப்பவர்களுக்கு, “தமிழ்நாடே என் வீடு” எனத் தெளிவாக பதிலளித்தார். தமது கட்சியை அனுபவமற்றது என சிலர் கூறுவதாக குறிப்பிட்ட அவர், “அனுபவம்” என்ற பெயரில் 75 ஆண்டுகள் பழமையான கட்சியும், 55 ஆண்டுகள் பழமையான கட்சியும் மக்களை ஏமாற்றி வந்துள்ளன” என்று குற்றம்சாட்டினார்.
சென்னையிலிருந்து தனி விமானத்தில் சேலத்துக்கு வந்த விஜய்க்கு வழியெங்கும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர் தூவியும், வாகனத்தை மறித்தும் அவர்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். சீலநாயக்கன்பட்டி செல்லும் வழியில், பெரியார் பல்கலைக்கழகம் அருகே திரண்டிருந்த ஆதரவாளர்கள் விஜயின் காரை தடுத்து வரவேற்றனர். இதனால் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது; ஒரு ஆம்புலன்ஸ் கூட சில நிமிடங்கள் நெரிசலில் சிக்கியதாக கூறப்படுகிறது.
நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய விஜய், “தமிழகத்தில் மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது; ஆனால் எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனக்கும், என்னைச் சந்திக்க வரும் மக்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “பணம் கொடுத்து வாக்கு கேட்பவர்களை நம்ப வேண்டாம். பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால் வாக்கு மனசாட்சிப்படி செலுத்துங்கள்” என கூறி, கட்சியின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தொண்டர்களிடம் உறுதிமொழி பெற்றார்.
“என்னைப் போல சுயமாகக் கட்சி தொடங்கி, குறைந்தது ஒரு விழுக்காடு வாக்கு வாங்கும் தைரியம் வேறு எந்தத் தலைவருக்கும் உள்ளதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மீது விமர்சனம் செய்த அவர், “வெல்வோம் ஒன்றாக என்கிறார்கள்; ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கிடைக்கும் பலன்களை மட்டும் தனியாக அனுபவிப்போம் என்ற மனநிலையில்தான் உள்ளனர்” என சாடினார்.