பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு
தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதியை நிறைவேற்றி, பழனியை மார்ச் 5க்குள் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பழனியை பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்குவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் கூட, அந்த அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த வாக்குறுதி மீறலை கண்டித்து, பழனி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அண்ணாமலை, பழனி ஆன்மிக நகரமாக இல்லாமல் குப்பைகள் நிறைந்த நகரமாக மாற்றப்பட்டுள்ளதாக வேதனை வெளியிட்டார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் மக்கள் நலனை புறக்கணித்து, ஊழலிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.