மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் பண முறைகேடு – ஆளும் கட்சி நிர்வாகிகள் மீது புகார்
சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில், கோயில் நிர்வாக அதிகாரியின் துணையுடன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பண முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேச்சேரியில் அமைந்துள்ள வட பத்திரகாளியம்மன் கோயிலின் நிர்வாக பொறுப்பாளர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கோயிலின் பெயரை பயன்படுத்தி சட்டவிரோதமாக பணம் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கோயிலைச் சுற்றியுள்ள வணிகக் கடைகளிடம் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் தலா 500 ரூபாயும், பிற நாட்களில் 200 ரூபாயும் கட்டாயமாக வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் எருமை கன்றுகளை ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் பணம் திரட்டப்படுவதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், கோயில் நிர்வாக அதிகாரியின் உதவியுடன் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.