பிரதமரை இழிவுபடுத்தும் போஸ்டர் விவகாரம் – திமுகவினருடன் மோதலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில், தங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், கடும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அருகேயுள்ள வீரக்கல் புதூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், பாஜக கூட்டுறவு பிரிவு ஒன்றியத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை, ராமன் நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அதை கண்ட சங்கர், அந்த போஸ்டர்களை ஒட்டியதாக கூறப்படும் திமுகவினரை தடுக்க முயன்றுள்ளார். இதனால் அங்கு இருந்த திமுக கவுன்சிலர் சோபனா உள்ளிட்ட சிலர் சங்கருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த சங்கர், உடனடியாக மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஹரிராமன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று சங்கரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிராமன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது உரிய வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சார்பில் பெரும் அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.