நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லுபடியாகும் – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூபாய் 1 கோடியே 50 லட்சம் அபராதம் சட்டப்படி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு, நடிகர் விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
2015–16 நிதியாண்டிற்காக விஜய் தனது வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என கணக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அந்த வருமான அறிக்கையை ஒப்பிட்டு ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், ‘புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தனர்.
இதன் அடிப்படையில், வருமானத்தை மறைத்ததாகக் கூறி, கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் ஆரம்ப கட்டத்தில், அபராத உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லுபடியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது.