“தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்ற உறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியை அதிகரித்து, வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இடையூறு இல்லாமல் மின்சாரம் வழங்குவோம் என அளித்த வாக்குறுதி தற்போது என்ன நிலைமையில் உள்ளது? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு அனல் மின் நிலையங்களில் இருந்து கடந்த நான்கரை ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பதே தற்போதைய ஆட்சியின் தோல்விக்கு தெளிவான சாட்சியென விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், மின் உற்பத்தியை உயர்த்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என கூறுவது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பிய அவர், ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தியதும், இந்தியாவிலேயே அதிக நஷ்டம் சந்திக்கும் மின்வாரியங்களில் ஒன்றாக தமிழகத்தை மாற்றியதும் தவிர, மின்சாரத் துறையில் வேறு எந்த குறிப்பிடத்தக்க சாதனையும் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் விளைவாக, ஊழல் நிறைந்த இந்த அரசின் செயல்பாடுகள் மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தகைய மக்கள் விரோத ஆட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற தமிழக மக்கள் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.