மன்னர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு – திருமாவளவன் மீது இந்து முன்னணி புகார்
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி அமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் பழனிசாமி தாக்கல் செய்த புகார் மனுவில், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுக்கு தன்னிடம் எந்த மரியாதையும் இல்லை என்றும், அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் தமிழகம் சிதைவடைந்ததாகவும் பொதுக்கூட்டத்தில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் பேரரசர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட மன்னர்களையும், இந்து மதக் கடவுள்களையும் அவதூறாக விமர்சித்துள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மொழி அடிப்படையில் மாநிலங்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், இது சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் திருமாவளவன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த மனுவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.