ஒரே மேடையில் தமிழ்நாட்டு நாய் இனங்களும் வெளிநாட்டு இனங்களும் – மயிலாப்பூரில் நடந்த நாய் கண்காட்சி கவனம் ஈர்ப்பு
தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களும், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு நாய் இனங்களும் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட நாய் கண்காட்சி, சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த கண்காட்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்தியது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட நாய் இனங்கள் இடம் பெற்றன. மொத்தமாக 408-க்கும் அதிகமான நாய்கள் இதில் பங்கேற்றன.
இந்த கண்காட்சியில் பெல்ஜியன் மெல்லினாய்ஸ், டோபர்மேன், பீகில், ராட்வீலர், பொமேரியன், சைபீரியன் ஹஸ்கி, பிட்புல், கிரேட் டேன் உள்ளிட்ட பிரபல வெளிநாட்டு நாய் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் சொந்த இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி மற்றும் கோம்பை நாய்கள் முதல்முறையாக சிறப்பு கவனத்துடன் மேடையேற்றப்பட்டன.
நாய்களின் நடத்தை, கீழ்ப்படிதல் திறன், நடை அழகு, உடல் அமைப்பு, பராமரிப்பு, சிகை அலங்காரம் போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த கண்காட்சியில் இந்தியா மட்டுமல்லாமல், ருமேனியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச நடுவர்கள் பங்கேற்று, வெற்றி பெற்ற நாய்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நாய் இனங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை ஆகியவற்றை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாய் இனங்களாக கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த கண்காட்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் நாட்டு நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே இத்தகைய கண்காட்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கான முக்கிய நோக்கம் என்றும் அவர்கள் விளக்கினர்.
தமிழ்நாட்டின் இந்நாட்டு நாய் இனங்கள் வேட்டைக்காக மட்டுமல்லாமல், வெளிநாட்டு இனங்களை விட நீண்ட ஆயுள் கொண்டவையாகவும், குறைந்த செலவில் பராமரிக்கக் கூடியவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக பராமரிப்பு தேவையில்லாத இந்நாட்டு இனங்கள் தற்போது உலக அளவில் மெதுவாக பிரபலமடைந்து வருகின்றன.
இந்நிலையில், நாட்டு நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் வெளிநாட்டு நாய்களுக்கு வழங்கப்படும் போன்று சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லை என்பது வருத்தமளிப்பதாக நாய் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நாட்டு நாய்களுக்கான மருத்துவ வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்றும், கடந்த பத்து ஆண்டுகளாக மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நாட்டு நாய் இனங்களை அரசு உதவி இல்லாமல் உரிமையாளர்களே பாதுகாக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த கண்காட்சியில் இந்திய நாட்டு நாய்களுடன் சேர்ந்து, ரஷ்யன் ப்ரீட் வகைகள், இங்கிலீஷ் செட்டர், ஜாக் டெரியர் போன்ற வெளிநாட்டு நாய் இனங்களும் காட்சியளித்து பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.