பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி 13 நிமிடமாக குறைவு
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அதிவேக ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாக குறையும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், “தெற்கு அதிவேக முக்கோணம்” அல்லது “தெற்கு அதிவேக வைரம்” என்ற புதிய ரயில் வலையமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த அதிவேக ரயில் திட்டம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகிய ஐந்து தென்னிந்திய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பெரும் பயனளிக்கும் முக்கிய திட்டமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரத்திற்கும் சற்றே அதிக நேரத்தில் பயணம் செய்ய முடியும். அதேபோல், பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நகரத்தை இரண்டு மணி நேரத்திற்குள் அடையலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சென்னை–ஹைதராபாத் இடையேயான பயண நேரம் சுமார் 2 மணி 55 நிமிடங்களாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அதிவேக ரயில் திட்டம், தென்னிந்திய மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம், தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு புதிய வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.