விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம்வில், கடந்த 6ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வந்தன. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளிலேயே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பெற்றனர்.
அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருந்ததால், பனையூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விருப்ப மனுக்களை நேரில் பெற வேண்டாம்; ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, பனையூர் அலுவலகத்தில் நேரடியாக 10 ஆயிரம் பேரும், ஆன்லைன் வழியாக 40 ஆயிரம் பேரும் என மொத்தம் 50 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க இன்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாமல் பனையூர் அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. இறுதி நாளான இன்று தலைமை நிர்வாகிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால், விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க வந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.