ஓய்வூதிய விவகாரத்தில் திமுக அரசு வாக்குறுதி மீறல் – அன்புமணி குற்றச்சாட்டு
ஜனவரி மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சுமார் 5 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியிடப்படாததால், தமிழக அரசு அவர்களை ஏமாற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் எந்த பயனும் இல்லாதது என்றும், அது ஆரம்பத்திலிருந்தே மக்களை தவறாக வழிநடத்தும் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று தான் முன்பே எச்சரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திட்டத்திற்கான விதிமுறைகள் முழுமையாக உருவாக்கப்பட்ட பின்னரே அது செயல்பாட்டுக்கு வரும் என்ற உண்மையை திமுக அரசு தெரிந்தே மறைத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த குறைந்தபட்சம் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் நிலையில், தற்போதைய திமுக அரசிடம் அதற்கான பொருளாதார வளம் இல்லை என்றும், அதனால் தேவையான நிதியை ஒதுக்கவும் முடியாது, திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவும் இயலாது என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.