தமிழக பாஜக தேர்தல் அறிக்கை: மக்களிடமிருந்து கருத்து சேகரிப்பு இயக்கம் தொடக்கம்
தமிழக பாஜக தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் நோக்கில், அதற்கான வாகனப் பயணத்தை பாஜக நிர்வாகிகள் சென்னையில் தொடங்கி வைத்தனர்.
சென்னை அமைந்தகரையில், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் “மக்களுக்காக – மக்களிடமிருந்து” என்ற தலைப்பில் கருத்து கேட்பு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், மக்களிடம் நேரடியாக கருத்துகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களின் பயணத்தை அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த வாகனங்கள் தமிழகத்தின் 39 மாவட்டங்களிலும் 7 நாட்கள் பயணம் செய்து, பொதுமக்களின் கருத்துகள், எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளை சேகரிக்கவுள்ளன. இவ்வாறு பெறப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பாஜக தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யலாம் என எண்ணுகிறது என்றும், இனி அந்த அணுகுமுறை மக்கள் மத்தியில் பலன் தராது என்றும் கூறினார். மேலும், தமிழ் மொழிக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் பாஜக எப்போதும் உரிய முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.