நடிகையின் இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச குறுஞ்செய்தி – இளைஞரை பிடித்து தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்த ஸ்ரீஅஸ்வினி
சென்னை அசோக் நகரில், இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமான தகவல்களை அனுப்பிய உணவக ஊழியரை, சீரியல் நடிகை ஒருவர் பிடித்து தாக்கி பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இந்தியன் – 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஞானலீலா என்ற ஸ்ரீஅஸ்வினி, சமீபத்தில் தனது இயக்கத்தில் வெளியான ‘கேட்ட வார்த்தை, கெட்ட வார்த்தை’ என்ற குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றார். அந்த குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்றது.
இந்த சூழலில், நடிகை ஸ்ரீஅஸ்வினியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு ஒருவர் தொடர்ந்து ஆபாசமாக பேசும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நட்பாக உரையாடுவது போல மெசேஜ்களை அனுப்பிய அந்த நபர், அசோக் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருவதை நடிகை கண்டறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது கணவருடன் அந்த உணவகத்திற்கு சென்ற ஸ்ரீஅஸ்வினி, தனக்கு ஆபாசமான தகவல்களை அனுப்பிய நபரை நேரில் பிடித்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து, குற்றச்சாட்டுக்குள்ளான நபரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.