நள்ளிரவு திருட்டு முதல் பகல் கொள்ளை முயற்சி வரை – போலீசார் அதிரடி நடவடிக்கை
சேலம் அருகே, பகல் நேரத்தில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சூரமங்கலம் அருகேயுள்ள சேலத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் சுமதி என்பவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் வெள்ளி நகை விற்பனை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து, சுமதி மீது மிளகாய் பொடியை தூவி நகைகளை பறிக்க முயன்றுள்ளார்.
எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சுமதி சத்தமிட்டு கூச்சலிட்டதால், அந்த நபர் பயந்து கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, நள்ளிரவில் வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் நகர பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஐந்துமுனை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த கண்ணதாசன் என்பவரை பிடித்து விசாரித்தனர். சோதனையில், உருக்கிய நிலையில் இரண்டு தங்கக் கட்டிகள் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணதாசன் தனது நண்பர் ஸ்ரீராம் உடன் இணைந்து கீரனூர் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் கண்ணதாசனை கைது செய்து, அவரிடம் இருந்த 132 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.