சென்னை அடையாறு மும்முர கொலை சம்பவம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை – 5 பேர் கைது
சென்னை அடையாறு பகுதியில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அடையாறில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பவர், தனது மனைவி புனிதா குமாரி மற்றும் சிறுமி குழந்தையுடன் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கவுரவ் குமாரின் மனைவி புனிதா குமாரியை, அதே மாநிலத்தைச் சேர்ந்த சிலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய கவுரவ் குமாரை, அந்த கும்பல் கொலை செய்து, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி இந்திரா நகர் சாலையில் கடந்த திங்கட்கிழமை வீசி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கவுரவ் குமாரின் மனைவி புனிதா குமாரி மற்றும் அவரது மகளையும் அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் உடல் பக்கிங்காம் கால்வாயில் வீசப்பட்டதாகவும், புனிதா குமாரியின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மூவர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், புனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.