“போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்ற உறுதி முதல்வரிடம் இல்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஒருகாலத்தில் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டதாகவும் கூறினார். இந்த மாற்றத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தான் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
காவல்துறையை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரால், போதைப்பொருள் பழக்கத்தை ஏன் முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால், காவல்துறை வீடு புகுந்து கைது செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும், இதன் பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.