EU உடன் கையெழுத்தான வர்த்தக உடன்பாடு:
இந்திய தொழில்துறைக்கு பலமடங்கு வளர்ச்சி – ரபிக் அகமது
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக உடன்பாடு, நாட்டின் தொழில் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கோத்தாரி நிறுவனத்தின் தலைவரான ரபிக் அகமது தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கோத்தாரி நிறுவன அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்த முக்கியமான வர்த்தக உடன்பாட்டை முன்னெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தற்போது உலகின் பல நிறுவனங்கள் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக, அவை மீண்டும் இந்தியாவை நோக்கி திரும்பி வரத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு காலணி தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவில் உலகளவில் புகழ்பெற்ற தனித்துவமான காலணி பிராண்ட் இதுவரை உருவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக, காலணி உற்பத்தித் துறையில் தமிழ்நாடு உலகளாவிய அளவில் முக்கிய இடத்தைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றும் ரபிக் அகமது தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காலணி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை இனி முழுமையாக நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்ய கோத்தாரி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள திறமையான இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கும் வகையில் தேவையான வாய்ப்புகளை உருவாக்க கோத்தாரி நிறுவனம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரபிக் அகமது தெரிவித்தார்.