“தமிழக வெற்றி கழகம்” உண்மையில் வெற்றிவணிக அமைப்பாக மாறிவிட்டதா? – பாஜக செய்தித் தொடர்பாளர் கடும் விமர்சனம்
நடிகர் விஜய்க்கு வழிகாட்டும் கொள்கை ஆசான் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ள தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், “தமிழக வெற்றி கழகம் (தவெக) அரசியல் கட்சியாக அல்ல, வணிக நோக்கில் செயல்படும் அமைப்பாக மாறியுள்ளது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை நிராகரிப்பேன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடம் சத்தியம் செய்து அரசியலுக்கு வந்த நடிகர் விஜய், அந்த வாக்குறுதிகளை மறந்துவிட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியுடனும், வாரிசு அரசியலின் முகமாக உள்ள ராகுல் காந்தியுடனும் நடிகர் விஜயை இணைக்க முயலும் அந்த ‘மறைமுக கொள்கை இயக்குநர்’ யார் எனவும் அவர் வினவியுள்ளார்.
காங்கிரஸை அழைக்க வேண்டும் என கூறும் விஜயின் தந்தை சந்திரசேகரா?
அல்லது மலேசியாவில் ரகசியமாக விஜய் சந்தித்ததாக கூறப்படும், ராகுல் காந்திக்கு நெருக்கமான, உலகளாவிய சூதாட்ட வணிகத்தில் தொடர்புடைய லண்டன் தொழிலதிபரா?
இவற்றை உலக அரசியல் அறிஞர் என தன்னை கூறிக்கொள்ளும் நாஞ்சில் சம்பத் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கொள்கை வழிகாட்டி திருமாவளவன் எனில், அந்தக் கட்சியின் சாதாரண தொண்டர்களுக்கு உண்மையான கொள்கை தலைவர் யார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் – சீர்திருத்தம், பகுத்தறிவு கொள்கைகளுக்காக;
டாக்டர் அம்பேத்கர் – சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்புக்காக;
கர்மவீரர் காமராஜர் – கல்வி, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக;
வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் – தியாகம், வீரத்திற்காக;
இவர்களே எங்கள் கொள்கை தலைவர்கள் என்று முதல் மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்தது வெறும் மேடை நாடகமா? எனவும் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தலைவர்களுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத, தனிநல அரசியலில் ஈடுபடுவதாக விமர்சிக்கப்படும் விசிக தலைவர் திருமாவளவனே கொள்கை ஆசான் என, தவெக துணைப் பொதுச் செயலாளர் அறிவித்ததன் பின்னணி என்ன? என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா விசிகவை விட்டு விலகி, திடீரென தவெகவில் இணைந்தது போல, தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருமாவளவனும் தவெக-ன் கொள்கை ஆசானாக அறிவிக்கப்பட உள்ளாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பட்டியலின மக்களின் பாதுகாவலர் என தன்னை முன்னிறுத்திக் கொண்ட திருமாவளவன், விசிக கட்சியை திமுகவிடம் இரு மக்களவை தொகுதிகளுக்காக அடகு வைத்து, திமுக அரசின் ஊழல், நிர்வாக தோல்வி, மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து குரல் கொடுக்காமல், ஊடகங்களில் நாடகமாடுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து கட்சிகளுக்கும் ஆலோசனை வழங்கும் திருமாவளவன், நடிகர் விஜய் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா வழியாக மறைமுக அறிவுரை வழங்குவது ஏன்?
ஒருபுறம் திமுக–காங்கிரஸ் கூட்டணி, மறுபுறம் காங்கிரஸ்–தவெக கூட்டணி என, சீட் பேரத்திற்காக இரட்டை வேடம் போடுகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கமாக தொடங்கிய அமைப்பில் நம்பிக்கையுடன் இணைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள், மக்கள் நல அரசியலை எதிர்பார்த்து தவெகவில் சேர்ந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை விஜய் சுயநல அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தொண்டர்கள் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசு காரணம் என கூறிய விஜய், தமிழகம் முழுவதும் சென்று நீதி கேட்கவில்லை; அந்த குடும்பங்களுக்காக போராடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர்களின் உயிர் ஈரம் காயும் முன்னரே, ஊழல் மற்றும் வாரிசு அரசியல் கொண்ட காங்கிரசுடன் கூட்டணி பேசுவது எந்த நியாயம் என்றும் அவர் சாடியுள்ளார்.
தன்னைத் தானே எதிர்கால முதல்வராக அறிவித்துக் கொண்ட நடிகர் விஜய், தற்போது பாஜக அழுத்தம் தருகிறது என குற்றம்சாட்டுவதாகவும், “ஜனநாயகம்” திரைப்படத்தை வெளியிட மத்திய அரசு தடையாக இருப்பதாக பொய்யான பிரசாரம் நடத்தப்படுவதாகவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.
தவெக தொடங்கிய பின்னர், திருமாவளவனுடன் நிகழ்வுகள், ஆதவ் அர்ஜுனாவுடன் அரசியல்-வணிக ஒப்பந்தங்கள், லாட்டரி பண அரசியல், சினிமா தியாகத்திற்கு இரட்டை இழப்பீடு போன்ற பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன், தவெக விளம்பர பிரிவு செயலாளரைப் போல தினமும் விஜய்க்கு அறிவுரை கூறி, திமுக அரசின் தவறுகளை மறைத்து, அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக காரணம் என ஊடகங்களில் புலம்புகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் லாபத்திற்காக திமுகவிற்கும் விஜய்க்கும் ஒரே நேரத்தில் நட்பு காட்டி, ஊடக வெளிச்சத்துக்காக நாடகம் ஆடுவது இனி மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை எதிர்ப்பதில் மறைமுக ஒற்றுமையுடன் செயல்படும் நடிகர் விஜயும், புதிய அரசியல் கதாபாத்திரத்தில் நடிக்கும் திருமாவளவனும், இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.