அரசியல் நாகரிகம் இழந்த அறிவாலயம் விரைவில் வீழ்ச்சி அடையும் : நயினார் நாகேந்திரன்
அரசியல் பண்பாட்டை முற்றிலும் இழந்த அறிவாலயம் விரைவில் அழிவை சந்திக்கும் என, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சியில், திமுக மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், பிரதமர் நரேந்திர மோடியை குறித்து தரக்குறைவான மற்றும் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய பதவியில் உள்ள பிரதமரை பொதுமேடையில் இழிவுபடுத்திப் பேசுவதும், அதனை மேடையில் இருந்தவர்களும், அருகிலிருந்தவர்களும் கைத்தட்டியும் சிரித்தும் ரசிப்பதும், திமுகவின் மொத்த அரசியல் மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமரை குறித்து அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் இருந்து தொடங்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது வரை திமுக தொடர்ந்து அரசியல் மரியாதையின் எல்லைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், இந்த கீழ்த்தரமான அணுகுமுறையை இனியும் சகிக்க முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், பிரதமரை அவமதித்ததற்காக திமுக மாநில வர்த்தகர் அணி செயலாளர் உடனடியாக பொதுமக்கள் முன்பு மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்திய அவர், உலகம் மதிக்கும் தலைவரை அரசியல் விரோத உணர்ச்சியின் காரணமாக அவதூறாகப் பேசும் அறிவாலயம், முழுமையாக வீழ்ச்சியடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் எச்சரித்துள்ளார்.