கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாததைக் கண்டித்து, கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
T.வேப்பங்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, கண்மாய் கரை அருகே உள்ள கிழவி அம்மன் கோயிலுக்கு பட்டா வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
ஆனால் அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால், கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர் வட்டார வளர்ச்சி அலுவலரின் காரில் தொங்கியபடி சென்றதால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த நபர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பதற்றமான சூழல் நிலவியதால், அந்த பகுதியில் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.