ரவுடி வெள்ளைகாளி மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் அருகே ரவுடியை கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர், காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரம்பலூர் அருகே, வெள்ளைகாளி என அழைக்கப்படும் ரவுடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சென்னைக்கு அழைத்துச் சென்ற வேளையில், அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசி அவரைக் கொலை செய்ய முயன்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அழகுராஜா என்பவர் திருமாந்துறை அருகேயுள்ள வனப்பகுதியில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, அழகுராஜா காவலரை தாக்கியதுடன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த நாட்டுவெடிகுண்டை வீசி தப்பிச் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ரவுடி அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் சங்கர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.