பத்திரப்பதிவு தொடர்பான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அனுமதி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்த பத்திரப்பதிவு மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றது.
இந்த புதிய சட்டத்தின் படி, சொத்து பத்திரப்பதிவு செய்யும் போது, அந்தச் சொத்திற்கான மூல ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த சொத்து அடமானமாக வைக்கப்பட்டிருந்தால், அடமான உரிமை கொண்ட நபரிடமிருந்து எந்தவிதத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்று, பத்திரப் பதிவின்போது வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சொத்திற்கான அசல் ஆவணங்கள் காணாமல் போயிருந்தால், அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து, “ஆவணங்கள் கிடைக்கவில்லை” என்பதைக் உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டியதாயுள்ளது.
இந்த அனைத்து விதிமுறைகளையும் உள்ளடக்கிய பத்திரப்பதிவு மசோதாவுக்கு தற்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.