சீமான் குறித்து அவதூறு, கொலை மிரட்டல் – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வரும் லெப்ட் பாண்டி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனை கடுமையாகவும், அவதூறாகவும் விமர்சித்ததோடு, அவர்களது உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கிழக்குச் செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் லெப்ட் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் விமர்சனங்கள் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அவதூறு, ஆபாசம் மற்றும் வன்முறை மிரட்டல்களாக மாறுவது ஜனநாயகத்திற்கும் சமூக அமைதிக்கும் பாதகமானது என்ற கருத்தும் பொதுவெளியில் வலியுறுத்தப்படுகிறது.