வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடரும் வன்முறைக்கு கடும் கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக இந்து சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் வன்முறைகளும் படுகொலைகளும் உலக சமூகத்தை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்துகின்றன.
சமீபத்தில் டாக்காவிற்கு அருகேயுள்ள நர்சிங்டி பகுதியில், 23 வயதான இந்து இளைஞர் சஞ்சல் பௌமிக் திட்டமிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், மனிதநேயத்திற்கு எதிரான கொடூரச் செயலாகும். இது ஒரு விபத்து அல்ல; சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட படுகொலை என்பது தெளிவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும், தீபு சந்திர தாஸ், மணி சக்ரவர்த்தி, சமீர் குமார் தாஸ், ராணா காந்தி பைராகி உள்ளிட்ட பலர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். HRCBM அமைப்பின் கணக்கின்படி, கடந்த 7 மாதங்களில் 116 சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த தொடர் வன்முறைகளால், வங்கதேசத்தில் வாழும் இந்து மக்கள் தங்கள் உயிர் மற்றும் எதிர்காலம் குறித்து அச்சத்தில் உறைந்துள்ளனர். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்த அரசின் அடிப்படை கடமையோ, அந்த கடமை இங்கு கேள்விக்குறியாகியுள்ளது.
சஞ்சல் பௌமிக் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கொடூரக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வங்கதேசத்தில் அமையவுள்ள புதிய அரசு,
சிறுபான்மை மக்களின் உயிர், உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யத் திடமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மனித உரிமைகள் மதிக்கப்படும் அமைதியான சமூகம் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.