நடிகர் விஜய் மீது கடும் குற்றச்சாட்டு: அதிமுக ஐடி விங் விமர்சனம்
பிளாக் டிக்கெட் விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நடிகர் விஜய் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என அதிமுக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நடிகர் விஜய்யை “பனையூர் பண்ணையார்” என விமர்சித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு அடிமையாக இருந்த வரலாறு அதிமுகவுக்கு இல்லை என்றும், மாநில நலன்கள் மற்றும் உரிமைகளுக்கு சவால் எழும்பும் போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் அதிமுகதான் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் தொடர்ந்துப் பேசிய அதிமுக, அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமே ஊழல் அல்ல என்றும், தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார மையத்திடம் நெருங்கி வருமானம் பெருக்குவதும் ஊழல்தான் என்றும் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிக்கும் விஜய், செங்கோட்டையனை அருகில் வைத்திருப்பது அவரது *“தூய ஆட்சி”*யா? என கேள்வி எழுப்பிய அதிமுக, கரூர் சம்பவத்தில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளது.
தன் மீது வழக்குகள் வரக்கூடும் என்ற அச்சத்தில், விஜய் 72 நாட்களுக்கு மேல் பனையூரில் தங்கியிருந்ததாகவும், உலக வரலாற்றிலேயே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், பனையூருக்கு அழைத்து வந்து ஆறுதல் பெற்றது இதுவே முதல் முறை என்றும் அதிமுக ஐடி விங் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் தூக்கி எறிய வேண்டும்” எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.