பழனி தைப்பூச திருவிழா: உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – கோயில் தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம்
பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தைப்பூச திருவிழா காலத்தில் பழனியில் அதிகளவில் பக்தர்கள் கூடுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதைத் தடுக்கும் வகையில் காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பின் துணைத் தலைவர் சுவாமி நாதன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ். ஸ்ரீமதி விசாரித்தார்.
விசாரணையின் போது, கோயில் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பழனிக்கு செல்லும் வழிகளில் பக்தர்களுக்காக குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் கோயில் நிர்வாகத்துக்கு மனுதாரரும் அவரது குழுவினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.