கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோதச் செயல்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், அண்டை நாடுகளுக்குக் கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றியுள்ளதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆளுங்கட்சி ஆதரவுடன் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதும், எந்தவித தடையுமின்றி தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் திமுக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டுவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் அரசு நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எவ்வாறு நுழைகின்றன, அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தில் புரையோடிப் போயுள்ள சட்டவிரோதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திமுக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.