மனதின் குரல் நிகழ்ச்சியில் கல்வராயன் மலைப் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்
கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் ‘பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ நாட்டளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்தில்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 360 பெண் விவசாயிகளும்,
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 400 பெண் விவசாயிகளும்
உறுப்பினர்களாக உள்ளனர்.
மலைப்பகுதியில் விளையும் திணை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மலைவாழ் பெண்களின் பொருளாதார தற்சார்புக்கும், கூட்டுத் தொழில்முனைவுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இந்நிலையில், ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைத்து வரும் பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளின் முயற்சிகளையும் சாதனைகளையும் குறிப்பிட்டு பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர்.
நாட்டின் கடைக்கோடி மலைப்பகுதியில் வசிக்கும் தங்களைப் போன்ற எளிய விவசாயிகளை பிரதமர் குறிப்பிட்டது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்ததாக பெண் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.