சிபாரிசு வழியாக மாவட்ட தலைவர்களை நியமனம் – தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி
தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்களாக 71 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் சிபாரிசின் அடிப்படையில் பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் கட்சிக்காக நீண்ட காலம் பாடுபட்ட தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி, மாவட்ட தலைவர் தேர்விற்கு மேலிட பார்வையாளர்கள் குழு அனுப்பப்பட்டு, அந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்ப மனு அடிப்படையில் 6 பேரை பரிந்துரை செய்தனர்.
ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் பழைய நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் பதவியை பெற்றதாக மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, 90 சதவீதம் பேர் உள்ளாட்சி தேர்தலில் கூட போட்டியிடாதவர்கள் என்பதும், வசதி படைத்தவர்களே பதவிகளில் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட தலைவர்கள் நியமனம், 2026 சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முழுவதும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மூத்த நிர்வாகிகள் விமர்சனம் செய்துள்ளனர்.