பெரம்பலூர் அருகே பரபரப்பு – கைதி ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு தாக்குதல்
பெரம்பலூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதியில், கைதி ஒருவரை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனத்தை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம், திரில்லர் திரைப்படக் காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘வெள்ளை காளி’ என்ற ரவுடியை, திண்டுக்கல் துணைச் சிறையில் இருந்து சென்னை நோக்கி போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வந்தபோது, கார்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கைதியை கொலை செய்யும் நோக்கில் காவல்துறை வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். மேலும், வாகனத்தை நிறுத்தி, வெள்ளை காளியை அரிவாளால் தாக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் சில காவலர்கள் காயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் சுங்கச்சாவடி தடுப்புகளை உடைத்துக்கொண்டு காரில் தப்பிச்சென்றது.
தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் விரிவான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், குற்றவாளிகள் தங்களது வாகனங்களை கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.
பின்னர் அந்த இடத்துக்கு சென்ற காவல்துறையினர், பயன்படுத்தப்பட்ட கார்களையும், அரிவாள் உள்ளிட்ட கொலை ஆயுதங்களையும் கைப்பற்றி, தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் (ஐஜி) பாலகிருஷ்ணன், தாக்குதல் நேரத்தில் காவலர்கள் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்ததாக தெரிவித்தார். மேலும், தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.